முதல் தென்னிந்தியத் திரைப்படம்

Cinema • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

இத்திரையரங்கையடுத்து சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல் "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். 1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் "ஏ.நாராயணன்". "ஜெனரல் பிக்சர்ஸ்" கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்கு முக்கியமான பங்கு வகிப்பவராவார். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விபரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான "மார்த்தாண்டவர்மன்" என்ற ஒரு படம் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டதாகும். திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரித்தானிய அரசு இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய ஒளிப்பதிவு சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பில்ம் லீக்" நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like